×

சண்டிமால், குசால் அரை சதம் இலங்கை 6 விக்கெட்டுக்கு 231

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில், 660 ரன் இமாலய இலக்கை துரத்தும் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன் எடுத்துள்ளது. ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இபோட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச, நியூசிலாந்து 178 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய இலங்கை அணி, டிரென்ட் போல்ட் வேகத்தை  சமாளிக்க முடியாமல் 104 ரன்னுக்கு சுருண்டது. கடைசி 4 வீரர்கள் தொடர்ச்சியாக டக் அவுட்டானது குறிப்பிடத்தக்கது. நியூசி. பந்துவீச்சில் போல்ட் 6 விக்கெட் வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து, 74 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 585 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ராவல் 74, லாதம் 176 ரன், நிகோல்ஸ் 162* ரன், கிராண்ட்ஹோம் 71* ரன்  விளாசினர். இதையடுத்து, 660 ரன் எடுத்தால் வெற்றி என்ற மிகக் கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 24 ரன் எடுத்திருந்தது.

கேப்டன் சண்டிமால் 14, குசால் மெண்டிஸ் 6 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் 3வது விக்கெட்டுக்கு 117 ரன் சேர்த்தனர். குசால் 67 ரன் எடுத்து (147 பந்து, 10 பவுண்டரி)  வெளியேற, ஏஞ்சலோ மேத்யூஸ் 22 ரன் எடுத்த நிலையில் காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார் (ரிடயர்டு ஹர்ட்). நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த சண்டிமால் 56 ரன் எடுத்து (228 பந்து, 5 பவுண்டரி) ஆட்டமிழக்க,  இலங்கை அணி பெரும் பின்னடைவை சந்தித்தது.ரோஷன் சில்வா 18, டிக்வெல்லா 19 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இலங்கை அணி 4ம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன் எடுத்துள்ளது. தில்ருவன் பெரேரா 22 ரன், சுரங்கா லக்மல் 16 ரன்னுடன்  களத்தில் உள்ளனர். கை வசம் 4 விக்கெட் இருக்க, இலங்கை அணிக்கு இன்னும் 429 ரன் தேவை என்ற நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chandimal ,Kusal ,Sri Lanka , Chandimmal, Kausal, hundred Sri Lanka ,
× RELATED இன்று தொடங்குவதாக இருந்த நாகை-இலங்கை...